தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரறிவாளர், சைவசித்தாந்த ஞானி திரு.கோபால் செட்டியார் நினைவுநாள் இன்று - 30 டிசம்பர் இவரின் வாழ்க்கை குறிப்பும் பன்முகத்தன்மை கொண்ட நெடிய அறிவாற்றலும் கிழேயுள்ள பதிவில். தோற்றம் :- 18.11.1867. மறைவு. :- 30.12.1953.
பன்முகத்தன்மை வாய்ந்த பேரறிஞர் கடத்தூர் திரு.D.கோபால் செட்டி அவர்களின் நினைவு நாள் இன்று மறைவு 30.டிசம்பர் 1953.
சேனைத்தலைவர் சமுதாயத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு தோன்றிய ஆளுமைகளில் முதன்மையானவர் தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிராமத்தை சேர்ந்த திரு.D.கோபால் செட்டியார். இவர் தேர்ந்தெடுத்த கருத்து, தத்துவம் மற்றும் கொள்கை வெகுமக்களை கவரும் வகையில் இல்லாமல் உலகளாவிய குறிப்பிட்ட அறிவுசார் வட்டத்தில் மட்டும் பரவியிருந்ததால் இவரின் சமூகப்பணிகளை பலர் அறிந்திலர். ஆனால் அவரின் கருத்துக்களும் தத்துவமும் சீர்த்திருத்த கொள்கைகளும் இன்றும் சமுதாய சிக்கல்களுக்கு அவசியமான தீர்வாகும் என்பது திண்ணம்.
தற்போதைய தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தில் 18.11.1867-ம் தேதி – தமிழை தாய்மொழியாகக் கொண்ட திராவிட இனத்தில் - திரு கோபால் செட்டியார் பிறந்தார். தந்தையார் திரு,துரைசாமி செட்டியார். தனது மூன்றாவது வயதில் தன் தந்தையை இழந்ததால் தாயின் அரவணைப்பில் இவரும் இவரது இளைய சகோதரரும் வளர்கின்றனர். திரு.கோபால் செட்டி இரண்டு வருடங்கள் தனது ஆரம்ப கல்வியை தமிழ் வழியில் கடத்தூரில் பயின்றார். பின்னர் தருமபுரி நகரில் உள்ள ஆங்கில மொழிவழி பள்ளியில் சேர்ந்து உயர் நிலைகல்வி பயின்றார், தருமபுரியில் அய்ந்து வருடங்கள் பயின்று மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணாக்கராக தேர்ச்சி அடைகிறார். அங்கிருந்து மேற்படிப்பிற்காக சென்னை கிருத்துவக் கல்லூரியில் சேர்ந்து B,A. பயில்கிறார், ஆங்கிலத்தில் மிகுந்த மதிப்பெண் பெறுபவராக இருந்தாலும் கணக்கு என்றால் அவருக்கு பிணக்குதான், இதனால் B.A. தேர்வில் கணித பாடத்தில் தேர்ச்சி பெரவில்லை. எனவே தனது பட்டம் பெரும் கனவு நிராசையாகியது. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவராக இருந்ததால் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவராக இருந்தார்.
பிறகு சிலகாலம் தான் பயின்ற தர்மபுரி உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார், அப்போது தனது நெருங்கிய உறவினர் மகளான பச்சியம்மாள் என்பவரை மணந்து இல்லறவாழ்வை தொடங்குகிறார், பிறகு வழக்கறிஞர் தொழில் மீது உள்ள அவாவினால் பாரிஸ்டர் பட்டத்திற்கு உரிய F.A, படிக்க மீண்டும் சென்னை சென்று படித்து தேர்ச்சி பெறுகிறார்,
சென்னையில் சட்டம் பயிலும்போதே திரு.கோபால் செட்டிக்கு “இந்து நாளிதழ்” ஆசிரியர் திரு.G,சுப்ரமணிய அய்யங்கார் அவர்களின் நட்பு கிடைக்கிறது. அவர் தலைமையில் இயங்கிய “சென்னை சமூக சீர்திருத்த சங்கம்” (Madras Social Reform Association) தொடங்குவதற்கு திரு.கோபால் செட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார், இதில் குறிப்பிடத்தக்கது இச்சங்கத்தின் தொடக்கவிழா அப்போது இவர் பயின்ற சென்னை கிருத்துவ கல்லூரியின் “இவான்ஜலிஸ்டிக் அரங்கில்” நடைபெற்றது.
வழக்கறிஞர் பட்டம் பெற்ற திரு.கோபால் செட்டி அப்போதைய ஒருங்கினைந்த ஆற்காடு மாவட்டத்தின் திருப்பத்தூர் நகரில் 1895-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலைத் தொடங்குகிறார். திருப்பத்தூரில் அவருக்கு சி.போர்டர் என்ற லண்டன் மிஸனை சேர்ந்த ஆங்கிலேய பாதிரியார் (Rev.II. C. Porter of the London Mission.) நட்பு கிடைக்கிறது. அவர் துணையுடன் பைபிள் கற்றுத் தேர்கின்றார், அதே சமயம் தனது தாய் மதமான சைவ மத்தின் மீது அவருக்கிருந்த பற்று சிறிதும் குறையவில்லை. இது அவரின் அறிவுத் தேடலுக்கும் பிற்காலத்தில் அவரின் உலக ஒற்றுமைக்கான புதிய மதம் அல்லது இயக்கம் ஒன்றை தேர்வு செய்வதற்கும் அடித்தளமாக அமைந்தது.
வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே சமூக சீர்திருத்தம், அனைவருக்குமான கல்வி, தமிழர் மதமான சைவ சித்தாந்த ஈடுபாடு, சாதி ஏற்ற தாழ்வு ஒழிப்பு, விதவை மறுமணம் போன்ற முற்போக்கு சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்தார், திருப்பத்தூர் நகரில் “சைவ சித்தாந்த வாசகர் வட்டம்” என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார், இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள் என பலர் அங்கம் வகித்தனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வாசகர் வட்ட கூட்டம் நடைபெறும், அதில் சைவ சித்தாந்தம், “சிவஞான போதம்” போன்ற தத்துவ விளக்கம், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பல இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
1895-ம் ஆண்டு முதல் 1907-ம் ஆண்டு வரை திருப்பத்தூரில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தனக்கிருந்த ஈடுபாட்டினாலும் சமூக மாற்றத்தில் இருந்த நாட்டத்தினாலும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் சென்னைக்கு புலம் பெயர்ந்து அங்கே “தி நியூ ரிபார்மெர்” (The New Reformer) என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழை 1907-ம் ஆண்டு தொடங்குகிறார்.
இவ்விதழ் மத, சமூக, பொருளாதார மற்றும் இதர சீர்திருத்தங்களுக்கானது என்று பத்திரிகையின் நோக்கமாக அறிவிக்கின்றார்.
இவரின் “தி நியூ ரிபார்மெர்” பத்திரிகைக்கு உலக அரங்கில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஆதரவாளர்கள் துருக்கி நாட்டை சேர்ந்த “பன்னாட்டு பாஹாய் அமைப்பை” சேர்ந்தவர்கள். இந்த அமைப்பை திரு.அப்துல் பாஹா (1819 முதல் 1850 வரை வாழ்ந்த மத சீர்திருத்தவாதி) என்பவர் தோற்றுவித்தவர் ஆவார். இவர் அனைவருக்குமான மத, இன, பொருளாதார வேறுபாடு அற்ற ஒருங்கினைந்த எந்த ஒரு வழிபாட்டு சடங்குகளின்றி இடைத்தரகர்களில்லாத “பாஹாய் அமைப்பை” தோற்றுவித்தவர் ஆவார். இந்த பாஹாய் அமைப்பு தற்போது உலக்கெங்கும் பரவி பன்னாட்டு அமைப்பாக வளர்ந்துள்ளது.
( கூடுதல் செய்தி : இந்தியாவில் டெல்லியில் 2001-ம் ஆண்டு 25 ஏக்கர் பரப்பளவில் 2500 பேர் அமர்ந்து அவரவர் விரும்பும் வண்ணம் சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றியும் எந்தவித சடங்கோ சம்பிரதாயமோ இன்றியும் வழிபடும் அரங்கு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது ).
அதேபோல் உலக அரங்கில் மற்றுமொரு மதசீர்திருத்த அமைப்பான “பன்னாட்டு ஸ்வீடன் பர்க் சொசைட்டி”-யிலும் திரு.கோபால் செட்டியாருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்திலிருந்து வெளிவந்த இந்த அமைப்பின் “தி நியூ சர்ச்” மாத இதழ் இவரைப் பற்றி கட்டுரைகள் பல எழுதியுள்ளது. இவர் எழுதிய ஆங்கில நூல்கள் அனைத்தும் இந்த மாதஇதழில் இடம் பெற்றது. இவரது சில நூல்கள் இங்கிலாந்து நாட்டிலும் அச்சடிக்கப்பட்டது. (சில ஆச்சிடப்படாமல் கைப்பிரதிகளாக இன்றளவும் இங்கிலாந்தில் உள்ளதாக நமக்கு தரவுகள் கிடைத்துள்ளது.)
இச்சூழலில், 1914 முதல் 1918 வரை நடைபெற்ற முதல் உலகப்போரின் தாக்கம் உலகெங்கும் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. திரு.கோபால் செட்டியார் நடத்தும் பத்திரிக்கையும் இதில் விதிவிலக்கல்ல. பெரும் இழப்பிற்கு இடையே 1917-ம் ஆண்டு “தி நியூ ரிபார்மர்” இதழ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு, பெரும் மனம் மற்றும் பணக் கஷ்டத்துடன் சொந்த ஊருக்கு வராமல், குடியாத்தம் நகரில் தனது மகன் வீட்டில் குடியேருகிறார்.
அதன் பின்னர் குடியாத்தம் நகரில் இருந்து கொண்டு, பெரும் பொருளாதார நெருக்கடியிலும், தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து பல நூல்களை எழுதி தனது சொந்த செலவில் பிரசுரம் செய்கிறார். இதனிடையே முப்பது ஆண்டுகள் தன் இன்ப துன்பங்களில் உறுதுணையாக இருந்த தன் மனைவி திருமதி,பச்சையம்மாள் 1918-ம் ஆண்டு மறைந்துவிடுகிறார், விதைவையான தனது மூத்த மகள் குப்பம்மாள் மற்றும் தாசில்தாராக பணிபுரிந்துவந்த தனது மகன் ஜி .ராஜமாணிக்கம் செட்டியார் அவர்கள் அரவணைப்பில் தனது இறுதிக் காலம்வரை வாழ்ந்து வருகிறார்.
( மகள் குப்பம்மாளின் கணவர் திரு,கிருஷ்ணன் கடத்தூரைச் சேர்ந்தவர், இவர் தற்போது தருமபுரியின் பிரபல டாக்டர் திருமதி.இராஜேஸ்வரி பெருமாள் அவரிகளின் தந்தைவழி தாத்தாவிற்கு இளைய சகோதரர் ஆவார்.)
இதில் வருந்தத்தக்க செய்தி இவரின் மகளுக்கும் மகனுக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை என்பது.
தனது அந்திம காலத்தில் உடல் நலிவுற்று கண் பார்வை முற்றிலும் மங்கிய நிலையில் தனது 90-வது வயதில் 30.12.1953-ம் ஆண்டு இரவு சுமார் 10.00 மணியளவில் இப்பூவுலகைவிட்டு புகழ்வுலகை அடைகின்றார்.
புகழ் மாலை
(1) திரு.கோபால் செட்டியார் மறைந்த அன்று ஆற்காடு மாவடட்த்தின் உள்ளூர் செய்தித்தாள்கள் அனைத்திலும் இவரின் பணியை நினைவுகூறி இரங்கள் செய்தி வெளியிட்ட்து.
(2) அதேபோல், சென்னையிலிருந்து வெளிவந்த அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களும் அண்ணாரின் சமூக மற்றும் மத சீர்திருத்தக் கருத்துக்களை நினைவுகூர்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டன.
(3) சென்னையிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழ் தி இந்து தனது ஜனவரி 6-ம் தேதி பதிப்பில் கீழ்கண்ட செய்தியை பதிவு செய்தது.
" D.Gopaul Chetty, late editor of the New Reformer, and father of Sri. G.Rujamanikham Chetty,rationing officerof this town, passed away on the 30thult. at 10 p.m. For the past 30 years he has published several philosophical works, both in English and Tamil."
(4) அதே தி இந்து நாளிதழ் மறுநாள் ஜனவரி 7-ம் தேதி பதிப்பில் கீழ்கண்டவாறு நெடிய தலையங்கம் தீட்டியது.
"We are sorry to note that the Dharmapuri scholar, I). Gopaul Chetty, passed awayon the 30th ult. in his 90th year. This great scholar . . . had worked for uplift of people at large and his community as well. Sixty years ago he started the social reform paper called the New Reformer. This worked for social reform, such improvements as widow re-marriage, and removal of untouchahility being some of the matters dealt with.. . . Believing that the liberty of his country could be established by social and religious reform, he published several famous works based on his reason therefor. . . .
(5) ஜனவரி 10-ம் தேதி குடியாத்தம் நகரில் ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட்து, அதில் சென்னை மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள், வழ்க்கறிஞர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் போன்ற பல சான்றோர்கள் கலந்து அண்ணாருக்கு புகழ் அஞ்சலி செலுதினர். ஒரு பாரிஸ்டர் தலைமை தாங்கினார். ஒரு பேச்சாளர் கோபால் செட்டி அவர்களைப் பற்றிய கவிதை ஒன்றை வாசித்து அவர் எழுதிய நூல்களைப் பற்றி குறிப்பாக “தி நியூ லைட் ஆன் இந்தியன் பிலாசபி” பற்றி ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினார், மற்றுமொரு பிரமுகர் பின் தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் செய்த அரும்பணிகளை நினைவுகூர்ந்தார், தலைமை பேச்சாளர் தனது முடிவுரையில் கோபால் செட்டி அவர்களின் சமுதாய மற்றும் மத சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியதோடு அண்ணாரின் எல்லா நூல்களையும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து நூல் நிலையங்களிலும் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.
(6) முத்தாய்ப்பாக வேலூர் முனிசிபல் கவுன்சில் அண்ணாருக்கு அஞ்சலி செலுத்த ஒரு சிறப்பு கூட்டத்தை ஜனவரி மாதம் கூட்டி ஒருமனதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது.
(7) இது போல தென்னிந்தியா முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களிடமிருந்து ஏராளமான இரங்கல் கடிதங்கள் வந்ததாக அண்ணரின் மகன் பதிவுசெய்துள்ளார்.
(8) திரு கோபால் செட்டியார் தொடர்பு கொண்டிருந்த உலகளாவிய அமைப்புகளான “சுவீடன்பர்க் சொசைட்டி’, இங்கிலாந்து; பன்னாட்டு பாஹாய் அமைப்பு பாம்பே கிளை; தி நியூ சர்ச் அமைப்பு அமெரிக்க, லியோ டல்ஸ்டாய் பவுண்டேசன், ரஷ்யா ஆகியவைகளிடமிருந்தும் இரங்கல் கடிதங்கள் வந்தது.
(9) குறிப்பாக அமெரிக்காவிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் “தி நியூ சர்ச் மெசஞ்சர்” இதழ் தனது ஜூன் 1954-ம் ஆண்டு இதழில் திரு.கோபால் செட்டி அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றினை அவர் வயது முதிர்ந்தபோது எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்தது.
(10) கோபால் செட்டியார் நீதிக்கட்சியிலும் இணைந்து செயல்பட்டார். தந்தை பெரியாரும் இவர் மீது நன்மதிப்பை கொண்டிருந்தார். இவர் இறந்தபோது 08.01.1954-ம் தேதி விடுதலை நாளிதழில் ஒரு துணை தலையங்கம் வெளியிட்டு பெரியார் அவர்கள் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
(11) மேலும் 1955-ம் ஆண்டு மே மாதம் தருமபுரியில் நடந்த சென்னை மாகாண சேனைதலைவர் 7-வது மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக திரு,கோபால் செட்டியாரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது.
கடத்தூர் பேரறிவாளர் டி.கோபால செட்டியாரின் பன்முகத்தன்மை
கடத்தூர் கோபால செட்டியார் பன்முகத்தன்மை கொண்ட பேராற்றல் கொண்ட அறிஞர் என்றால் மிகையாகாது. அவர் கீழ்கண்ட தளங்களில் தனது பன்முக அறிவாற்றலை உலகிற்கு விட்டுச்சென்றுள்ளார்.
1) நூலகர் (Librarian)
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் தற்போது உள்ளதுபோல் கல்விச்சாலைகளோ, நூலகங்களோ, படிப்பகங்களோ, நாளிதழ்களோ கிடையாது. சுதந்திரத்திற்குப் பின்னர்தான் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு வழங்கி மக்களிடம் வாசிக்கும் பழக்கம் உண்டானது. மக்களுக்கு வாசிக்கும் பழக்கம் உண்டான பிறகு நூலகங்கள் பல்கிப்பெருகின. அதுவும் கிரமங்களில் தேநீர் கடைகளும், முடிதிருத்த நிலையங்களும் செய்தித்தாள்கள் வாசிக்கும் மையமாக இன்றளவும் இருந்துவருகிறது. தற்போது ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஒரு நூலகம் வைக்கும் பண்பாடு வளர்ந்து வருகிறது. இதன் நீட்சியாக கடந்த இரண்டு வருடங்களாக இவ்வகையான புத்தகக் கண்காட்சிகள் மாவட்ட அளவிலும் நகர்புரங்களிலிம் நடந்து வருவது மக்களிடையே ஒரு அறிவார்ந்த வளர்ச்சிக்கு அறிகுறி.
ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டிலேயெ இவ்வாறான வாசிக்கும் பழக்கம் உருவாக வேண்டி திரு கோபால் செட்டியார் அவர்களிடம் நூலகம் உறுவாக்கி ஒரு அறிவார்ந்த சமூகத்தை படைக்க வேண்டும் என்ற வேட்கை மிகுந்து இருந்ததைக் காணலாம். அவ்வாறு நூலகம் அமைப்பதை தனது தொடக்க கால சமூகப் பணியாக தான் வழக்கறிஞராகப் பணிபுரிந்த திருப்பத்தூரில் (வேலூர் மாவட்டம்) தொடங்கினார்.
திரு கோபால் செட்டியார் திருப்பத்தூரில் நூலகம் அமைத்த செயலினை தருமபுரி மாவட்டம் நகரசம்பட்டி நா. சுப்ரமணிய செட்டியார் அவர்கள் திரு.கோபால் செட்டியார் எழுதிய “சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்’ எனும் நூலுக்கு தான் எழுதிய மதிப்புரையில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார் :- “1906-ம் வருடத்தில் நம் இந்திய தேசத்துக்கு சக்கரவர்த்தியாயும், கிரேட் ப்ரிட்டன், அயர்லாந்து முதலிய தேசங்களுக்கு அரசராயும், இப்போது இருக்கும் “His Majesty” அய்ந்தாவது ஜார்ஜ் அவர்கள் வேல்ஸ் இளவரசராக இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, அவர் பேரில் ஆங்கில மொழியில் ஓர் கவி இயற்றி வரவேற்றபோது, அதற்கு பிரதியுத்திரத்தில் நமது கோபால் செட்டியாருக்கு தனது அந்தரங்க காரியதரிசி Sir Walter Lawrence அவர்கள் மூலமாய் வந்தனம் அளித்தார். பின்னர் இந்த வேல்ஸ் இளவரசர் பெயரால் திருப்பத்தூரில் ஒர் வாசக சாலை சமர்பித்து, “Prince of Wales Reading Room” என்று இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்ததின்பொருட்டு ஞாபகார்த்தமாய் அதற்கு பெயரிட, அவ்விளவரசர் அனுமதி பெற்று, அவ்விதமே பெயரிட்டு, சேலம் ஜில்லாவில் அப்பொழுது கலெக்டராயிருந்த துரையைக்கொண்டு யாவரும் புகழ, வெகு சிறப்பாய், திறப்பு திருவிழாவும் நடப்பித்தனர். திருப்பத்தூர் மகா ஜனங்களும், நமது கோபால் செட்டியார் திரு நாமம் நெடு நாளிருக்க கல்லில் அவர் பெயரை சாசனமாக நாட்டி, அவர் திரு உருவ படத்தையும் அந்த வாசகசாலையில் அன்று வைத்தனர்”.
திருப்பத்தூர் நகரில் “சைவ சித்தாந்த வாசகர் வட்டம்” என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார், இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள் என பலர் அங்கம் வகித்தனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த வாசகர் வட்ட கூட்டம் நடைபெறும், அதில் சைவ சித்தாந்தம், “சிவஞான போதம்” போன்ற தத்துவ விளக்கம், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் பல இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
மேலும், இதில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை (Irony) தனது சமூகப்பணியை நூலகம் அமைத்து தொடங்கியது போல தனது இறுதி காலத்திலும் பொது பயன்பாட்டிற்கு ஒரு நூலகம் அமைத்து மறைந்தார். தனது இறுதிக்காலத்தில் குடியாத்தத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவ்வீட்டின் முன்பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு நூலகம் அமைத்து மக்களுக்கான அறிவார்ந்த சேவையை செய்து தனது அந்திமக்காலத்தை முடித்துக்கொண்டார்,
ஆம், அவரின் சமூகப்பனியின் தொடக்கமும் முடிவும் நூலகம் ஏற்படுத்தி மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உறுவாக்கும் அறிவார்ந்த பணி.
இதுமட்டுமல்ல சென்னை ராயப்பேட்டையில் தனது அலுவலகத்தில் தமது நூல்கள் மற்றும் தான் இந்தியாவில் தலைமையேற்று நடத்திய ஸ்வீடன் பர்க் கழகத்தின் வெளியீடுகள், டால்ஸ்டாய் போன்ற உலக அறிஞர்களின் நூல்கள் சைவ சித்தாந்த கழக வெளியீடுகள் பலவற்றையும் லாப நோக்கு ஏதுமின்றி விற்பனை செய்து வந்தார். இந்நூல்களின் பட்டியலையும் தனது நியூ ரிபார்மர் மாத இதழில் வெளியிட்டும் விளம்பரம் செய்துவந்தார்.
2) சட்டவல்லுனர்.
கல்வி கற்போர் குறைந்த அக்காலத்திலேயே பின்தங்கிய பகுதியான தருமபுரி மாவட்டத்தின் கடத்தூர் கிராமத்தில் ஒரு பின்தங்கிய வகுப்பில் பிறந்து திரு.கோபால் செட்டியார் தனது சொந்த முயற்சியால் சட்டப்படிப்பு பயின்றார், பொருளாதார நெருக்கடியால் மேற்கொண்டு இங்கிலாந்து சென்று பாரிஸ்டெர் பட்டம் பெருவதற்கு அவரால் இயலவில்லை. வழக்கறிஞர் பட்டம் பெற்ற திரு.கோபால் செட்டி தனது சொந்த ஊரான தருமபுரியில் இருந்து புலம் பெயர்ந்து அப்போதைய ஒருங்கினைந்த ஆற்காடு மாவட்டத்தின் திருப்பத்தூர் நகரில் குடியேறி, 1895-ம் ஆண்டு முதல் 1907-ம் ஆண்டு வரை வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
3) இதழியளாளர். (Journalist)
தனக்கிருந்த ஈடுபாட்டினாலும் சமூக மாற்றத்தில் இருந்த நாட்டத்தினாலும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் திருப்பதூரிலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்து அங்கே “தி நியூ ரிபார்மெர்” (The New Reformer) என்ற பெயரில் ஒரு ஆங்கில மாதாந்திர இதழை 1907-ம் ஆண்டு தொடங்குகிறார். இவ்விதழ் மத, சமூக, பொருளாதார மற்றும் இதர சீர்திருத்தங்களுக்கானது என்று பத்திரிகையின் நோக்கமாக அறிவிக்கின்றார்.
ஒவ்வொரு இதழின் அட்டை முகப்பிலும் கீழ் காணும் வாசகம் அடங்கிய மேற்கோள் இடம் பெற்றிருக்கும்.
"Oh, if you could dethrone the Brute-God Mammon and put a Spirit-God in his place." (Carlyle) (செல்வத்தை வழிபடும் காட்டுமிராண்டி கடவுளை அரியணையிலிருந்து அகற்ற உன்னால் முடியுமானால் ஒரு ஆத்மரீதியான கடவுள்தன்மையை அவ்விடத்தில் அமரச்செய்).
இந்த பத்திரிக்கை தலைப்பை ஒட்டி இது ஒரு சமூக சீர்திருத்தத்திற்கான இதழ். எனவே ஆசிரியர் தலையங்கம் மற்றும் இலக்கிய சுவைக்காக ஒர் ஆங்கில செய்யுள் ஒன்றும் ஒவ்வொரு இதழிழும் இடம்பெரும். பல்வேறு தலைப்புகளில் பெரும்பாலும் ஆங்கில எழத்தாளர்களின் கட்டுரைகள் பல இடம்பெற்றிருக்கும். இந்திய மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கட்டுரைகளும் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கும். தொட ர் கட்டுரைகளும் ஒருசில உண்டு.
தற்காலத்தில் தமிழில் “மஞ்சரி” என்ற மாத இதழ் இது போன்று வந்தது. ஆனால் ஆங்கிலத்தில் Readers Digest, Out Look, Front Line போன்ற இதழ்களுக்கு ஒப்பான இதழாக The New Reformer அதுவும் 1907-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது என்றால் வியப்பிற்குறிய செய்தியல்லவா? இந்த நியூ ரிபார்மர் இதழ் 1915-ம் ஆண்டு முதல் உலகப்போரினால் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிருத்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது
4) எழுத்தாளர்
திரு.கோபால் செட்டியார் ஒரு சிறந்த இதழியளாளர் என்பதால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது தெள்ளத்தெளிவு. அவரின் நியூ ரிபார்மர் ஒவ்வொரு இதழிழும் இவர் ஏதாவது ஒரு தலைப்பில் தலையங்கம் எழுதுவார். அவ்வாறு இவர் எழுதிய தலையங்கள் பெரும்பாலும் இன்றைக்கும் பொருந்துவனவாகவும் இன்றும் அரசியல் சமூக பொருளாதர தளங்களில் விவாதிக்கப்படும் மற்றும் பேசும் பொருளாக இருப்பது நிதர்சனமான உண்மை. இதைப் பார்க்கும்போது இவரின் அறிவாற்றலும் தீர்க்க தரிசனமும் தொலைநோக்கு சிந்தனையும் உலக நடப்புகளை கூர்ந்து நோக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர். இதனை வெளிப்படுத்தும் வண்ணம் நியூ ரிபார்மர் இதழின் ஆசிரியராகிய திரு.கோபால் செட்டியார் அவர்கள் எழுதிய தலையங்கங்களை கீழே தொகுத்து வழங்குகிறோம்.
The inequalities, inequities and the anamolies of Life (சமத்துவமின்மை, சமநிலையின்மை மற்றும் வாழ்வின் முரண்பாடுகள்), The way to God (கடவுளை அடையும் வழி), The spiritual Life (ஆன்மீக வாழ்வு), Mammon worship (தீய சக்திகள் வழிபாடு), The love of God. (கடவுளின் அன்பு) The Agricultural classes (விவசாய தொழில் பிரிவினர்),), The Religious and social history of India ( இந்தியாவின் மத மற்றும் சமூக வரலாறு), Education in India (இந்தியாவில் கல்விமுறை), Indian Nationality (இந்திய தேசியம்), Wealth and the Kingdom of God. (உடமையும் காடவுளின் அரசும்), The vanity of God. (கடவுளின் மாயாபிம்பம்), The religious education of young. (இளைஞர்களுக்கு மத கல்வி),, Humility (பணிவு) Priestly despotism in India. (இந்தியாவில் குருமார்களின் சர்வாதிகாரம்), Money and children (பணமும் குழந்தைகளும்), Why should we pray God ? (நாம் ஏன் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்), India’s unfitment for Swaraj. (சுதந்திர நாடாக இந்தியாவிற்கு தகுதி இல்லை ), The Special Marriage Amendment Bill (சிறப்பு திருமண சட்ட திருத்த வரைவு), Who is a good man ? (யார் நல்ல மனிதர்?), (வாழ்க்கையில் ஆசிகள்), East and West in India (இந்தியாவில் கிழக்கும் மேற்கும்) Rubaiyat of Omar Kayam (உமர் கயாமின் கவிதை)(ருபையட் என்றால் நாழு வரிகள் உள்ள பெர்சிய கவிதை வடிவம் – தமிழில் ஆசிரியப்பா, குறட்பா என்பதுபோல்), Non-brahmins and Social Reform. (பிராமணர் அல்லாதவரும் சமூக சீர்திருத்தமும்) A call to service (சேவை செய்ய ஒர் அழைப்பு), The Age of Unity (இது ஓன்றுபடுவதற்கான காலம்), Asceticism (துறவு) Sin (பாவங்கள), Educational colonies in India (இந்தியாவில் கல்வி ஆக்கிரமிப்பு) The South Indian castes (தெனிந்தியாவின் சாதி அமைப்புகள்), The Religion of the Tamils (தமிழர்களின் மதம்), The sacred thread (பூநூல் ) The evolution of Hinduism (இந்துமதத்தின் பரிணாம வளர்ச்சி), Tamil poets and Brahminism (தமிழ் புலவர்களும் பிராமணீயமும்) Kapilar ahaval (கபிலர் அகவல்), Happiness (மகிழ்ச்சி), Ancient Dravidian Women (ஆதிகால திராவிட பெண்கள்), Marriage(திருமணம்), The Pariah (பறையா) The Sudra (சூத்திரன்).
ஒவ்வோரு இதழிலும் Editorial Notes (ஆசிரியர் குறிப்புகள்) என்ற தலைப்பில் அய்ந்து முதல் பத்து பக்கங்களுக்கு எழுதியுள்ளார்.
அய்யா திரு.கோபால் செட்டியார் எழுதியுள்ள ஒவ்வொரு தலைப்பும் இன்றும் நமது சிந்தனையை தூண்டும் வண்ணம் உள்ளது என்பது திண்ணம்
மேலே குறிப்பிட்ட தலைப்புகள் இன்றும் அரசியல், சமூக, மத தளங்களில் விவாதப் பொருளாக உள்ளதை அனைவரும் அறிவோம். அவரின் இந்த தலைப்பை ஒட்டி என்ன எழுதியுள்ளார் என்பதை அறிந்து கொள்ளமுடியவில்லை. அதற்கான தரவுகள் கிடைக்கவில்லை.
5. மொழிபெயர்ப்பாளர்
மொழி பெயர்ப்பு என்பது பொதுவாக நினைப்பது போன்று எளிதான செயல் அல்ல. மூல எழுத்தாளரின் உளப்பாங்கை அறிந்து அதற்கேற்ப மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும். சிறு பிழை ஏற்பட்டாலும் அது பெரும் வரலாற்றுப் பிழையாக முடியும். மூலக் கருத்தின் வீச்சும் அதில் இருக்காது. எடுத்துக்காட்டாக பைபிளை மொழிபெயர்த்தவர் செய்த ஒரு தவறு இன்றும் பிழையாகவே கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது “Camel” என்ற ஆங்கில சொல்லிற்கு “ஒட்டகம்” என்றும் “வடகயிறு” என்றும் தமிழில் இரு பொருள் உண்டு. ஆனால் மொழிபெயர்ப்பாளர் “ஒட்டகம்” என்று மொழிபெயர்த்ததால் “சொர்க்கத்தின் வாசலில் ஒரு செல்வந்தன் நுழைவதைக்காட்டிலும் ஊசியின் காதில் ஒரு ஒட்டகம் நுழைவது எளிது” என்ற பொருத்தமில்லாத கருத்து திணிக்கப்பட்டுவிட்டது. இங்கு “வட கயிறு” என்று கூறியிருந்தால் பொருத்தமாக அமைந்திருக்கும்.
மொழிபெயர்க்க இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவரால் மட்டுமெ சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக,
இவ்வாறு ஆங்கில நூல்கள் ஒரு சிலவற்றை அதுவும் தத்துவ நூல்களை தமிழில் அழகாக மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் திரு கோபால் செட்டியார் என்றால் அவரின் பேராற்றலை என்னவென்பது. அதுபோல் தமிழ் சைவ சித்தாந்த கருத்துக்களை ஆங்கிலத்தில் எழுதி நூலாக வெளியிட்ட பேரறிவாளர் திரு கோபால் செட்டியார். அவரது படைப்புகள் சிலவற்றை பார்ப்போம் :-
1. “Tributes paid to Swedenborg by some of the most distinguished scholars of India” Written by Mr. Gopal Chetty. The preface signed by Mr Gopal Cetty. Year 1920.
2. Mupporul Uravu, முப்பொருள் உறவு. சைவ சித்தாந்த்த்தின்படி இறைவன், ஆன்மா, உடல் இவைகளின் உறவு. முப்பொருளுறவு. (Intercourse between Soul and body). Year 1921. In Tamil,
3. New Light upon Indian Philosophy or Swedonborg and Saiva Siddantha. English language. 8 editions published. Year 1923.
4. “Putiya Jerusalem Nagarathin Vazhkkai Potham.” ஸ்வீடன்பர்க் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு. புதிய எருசலேம் நகதின் வழ்க்கை போதம். Year 1927.
5. Translation of Swedonborg’s book “Doctrine of uses”. “பரம இச்சா ஞான தீபிகை.” Year 1928. In Tamil. அனாதி முதல் சித்துருவாகிய சிவபெருமானின் இச்சா ஞான சக்திகளின் சுபாவத்தையும், விரிவான தொழிற்பாடுகளையும் குறித்து, இந்த ஞான நூல் எழுதப்பட்டுள்ளது, இதுவரையில் கிரகிக்கமுடியாத சிதம்பர இரகசியங்கள் போன்ற அனேக தத்துவ சாஸ்திர உண்மைகள் இந்நூலில் யாவருமறிய முதல் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
6. “The Doctrine of Love and Wisdom” பதி பசு பாசம் விளக்கம். Translation of Swedenborg book. Year 1933. In Tamil. 504 pages.
7. “ஈசுவர இராச்சிய பரிபாலனப் பிரவாகம்” இது “the Doctrine of Providence” என்ற ஸ்வீடன் போர்க் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. 606 பக்கங்கள்.
8. “வாழ்க்கை போதம்” (Doctrine of life). ஒவ்வொரு மனிதனும் செய்யத்தகாத அப்பியாச சித்தமான காரியங்கள் என்னவென்றும், அவ்வித காரியங்கள் அடாது என்பதற்கு காரணங்களும் இதில் கூறப்பட்டிருக்கின்றன.
9. Root Principles – In rational and spiritual thinks. தாமஸ் சைல்டு என்பவர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு. It expounds a new and a very remarkable view of the great ideas and principles ethic underline the Universe and man. It is the most complete and satisfactory theory of the nature of matter and mind – of force and life – of spirit, immorality and free will, that has yet been given to the world. 136 பக்கங்கள்.
5) நூலாசிரியர்
கடத்தூர் பேரறிவாளர் திரு டி.கோபால் செட்டியார் அவர்கள் அறிய மானுட இயல் ஆய்வு மற்றும் வலாற்று நூல்களையும், சைவ சித்தந்த மெய்யியல் / தத்துவ நூல்களையும், இவரைப்பற்றி உலக நூலகங்களின் தொகுப்பான வோர்ல்ட்கேட் வலைதளம் கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது.
The worldcat website mentions about Mr Gopal Chetty as under :-
Works :- 19 works in 30 publications in two languages. US Library Holdings.
Genres :- History and Biographies.
Roles :- Author and Translator.
இவர் எழுதிய நூல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) “Count Leo Tolstoy - His life and Teachings” In English. In 1909. விலை 0-5-0 அணா.
2) “தமிழர் சரித்திரம்” In Tamil. In 1912.
3) “ஆதி திராவிடர் பூர்வசரித்திரம்” இது சென்னை “நியூ ரிபார்மெர்” பத்ராதிபர் டி.கோபால் செட்டியாரால் எழுதப்பட்டது. சென்னை ராமசுவாமி செட்டியார் அச்சியந்திர சாலையில் பதிக்கப்பட்டது. In 1920. இந்நூல் 32 பக்கங்கள்.
4) “Tributes paid to Swedenborg by some of the most distinguished scholars of India” Written by Mr. Gopal Chetty. The preface signed by Mr Gopal Cetty. Year 1920. Two editions.
5) Mupporul Uravu, முப்பொருள் உறவு. சைவ சித்தாந்தத்தின்படி இறைவன், ஆன்மா, உடல் இவைகளின் உறவு. முப்பொருளுறவு. (Intercourse between Soul and body). விலை 0-8-0 அணா.Year 1921. In Tamil,
6) New Light upon Indian Philosophy or Swedonborg and Saiva Siddantha. English language. 8 editions published. Year 1923. விலை ரூ 3-0-0. இந்த நூலை லண்டனில் பதிப்பித்து பிரசுரிக்க பம்பாயில் உள்ள சுவீடன் பர்க் கழகத்தின் முகவர் திரு ஏ.இ.பென் (A.E,Penn) ஏற்பாடு செய்தார். அதற்குமுன்னர் திரு பென் மெட்ராஸ் வந்தபோது திரு கோபால் செட்டியை சந்தித்து இதன் கைப்பிரதியை செட்டியாரிடம் இருந்து பெற்று அதை லண்டன் ஸ்வீடன் பர்க் கழகத்திற்கு அனுப்பி இதனை பதிப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அக்கழகம் அருள்மிகு எச்..ஜி.டுரூமண்டு மற்றும் கோல்ட்சாக் ஆகியோர் அடங்கிய குழுவினரின் பரிந்துரையின் பேரில் லண்டனில் பதிப்பிக்க ஏற்பாடு செய்தது. லண்டனில் உள்ள கழகம் இந்நூலினை இவருக்காக பதிப்பித்தது. முதல் பதிப்பில் 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. நியூ சர்ச் அமைப்பின் அமரிக்காவின் நியூயார்க் நண்பர் ஒருவர் பதிபிப்பதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொண்டார்.
7) “Puthiya Jerusalem Nagarathin Vazhkkai Potham.” ஸ்வீடன்பர்க் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு. புதிய எருசலேம் நகரத்தின் வழ்க்கை போதம். Year 1927.
8) Translation of Swedonborg’s book “Doctrine of uses”. “பரம இச்சா ஞான தீபிகை.” Year 1928. In Tamil. அனாதி முதல் சித்துருவாகிய சிவபெருமானின் இச்சா ஞான சக்திகளின் சுபாவத்தையும், விரிவான தொழிற்பாடுகளையும் குறித்து, இந்த ஞான நூல் எழுதப்பட்டுள்ளது, இதுவரையில் கிரகிக்கமுடியாத சிதம்பர இரகசியங்கள் போன்ற அனேக தத்துவ சாஸ்திர உண்மைகள் இந்நூலில் யாவருமறிய முதல் முதல் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
9) “Velan Manthar. Senaithalaivar or Senaikudaiyar Purva charithiram”. Year 1928. In Tamil. இந்நூல் தென்னாப்ரிக்கவின் பிரபல தொழில் அதிபர் பொறையார் திரு.ரா.பாலகுரு செட்டியார் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
10) “Chidambara Rahasyam Revealed”. A philosophical Treatise. The secrets of worship at Chidambaram and other connected mysteries are for the first time explained in a scientific and elaborate manner, in this book. The treatment of the secret regarding the God’s stay in the heart of man, is wonderfully new and not known to India hitherto. Year 1930. In Tamil.
11) “Saivam the religion of the Ancient Britons.” – சைவம்நெறி இங்கிலாந்தின் ஆதி மதம் - இதில் மனித இனம் முதலில் தோன்றியது கடல்கோளால் அழியப்பட்ட லெமூரியக் கண்டத்தில் தான் என்றும். உலகின் ஆதிகுடிகள் தமிழர்கள் என்றும், மனித சமூகம் இங்கிருந்துதான் புறப்பட்டு உலகமெங்கும் பரவியது என்று ஆணித்தரமாக பல அறிவியல் சான்றுகளுடன் நிரூபித்து காட்டியூள்ளார் திரு.கோபால் செட்டியார். இதுமட்டுமல்லாது இங்கிலாந்து நாட்டவரின் பழங்கால மதக்கோட்பாடு கிருத்துவத்திற்கு முன்னர் தமிழ் சமூகத்தின் சைவம் தான் என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் மற்றும் ஆய்வு முடிவுகளையும் சுட்டிக்காட்டி விளக்கமாகவும் நிரூபித்துள்ளார். இந்நூல் வலைதளத்தில் கிடைக்கிறது விரும்பும் அன்பர்கள் படித்து அறிந்துகொள்ளலாம். Year 1932. In English.
12) “New light upon the problem of reincarnation.” Or “swedonborg and Saiva Siddhantha” with a forward by L.B.De Beaumont, D.Sc, Printed by The Temple Press at Latchwork, Great Briton. Year 1923. In English.
13) “The Doctrine of Love and Wisdom” பதி பசு பாசம் விளக்கம். Translation of Swedenborg book. Year 1933. In Tamil. 504 pages.
14) “The mystery of creation scientifically explained.” Year 1935. In English.
15) “ஈசுவர இராச்சிய பரிபாலனப் பிரவாகம்” இது “the Doctrine of Providence” என்ற ஸ்வீடன் போர்க் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. 606 பக்கங்கள்..
16) “வாழ்க்கை போதம்” (Doctrine of life). ஒவ்வொரு மனிதனும் செய்யத்தகாத அப்பியாச சித்தமான காரியங்கள் என்னவென்றும், அவ்வித காரியங்கள் அடாது என்பதற்கு காரணங்களும் இதில் கூறப்பட்டிருக்கின்றன.
17) சுடர்ஞான சூரன் பராக்கிரமம்.
18) நூதன மறுமை விளக்கம்.
19) Root Principles – In rational and spiritual thinks. தாமஸ் சைல்டு என்பவர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு. It expounds a new and a very remarkable view of the great ideas and principles ethic underline the Universe and man. It is the most complete and satisfactory theory of the nature of matter and mind – of force and life – of spirit, immorality and free will, that has yet been given to the world. 136 பக்கங்கள்.
20) New Reformers Essays என்ற நூலில் இவரின் மாதஇதழில் வெளியிட்ட கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
21) Jesus is God – The philosophy of universal religion – “ஜீசஸ் தான் கடவுள் – உலகளாவிய ஒரே மதம் எனும் தத்துவம்” என்ற நூலை எழுதியுள்ளார். பேரறிவாளர் டி.கோபால செட்டியார் தனது வாழ்வின் லட்சியமாக உலக மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு மதம் மட்டும் தான் இருக்கவேண்டும் என்பதாகும். அந்த மதத்தில் எந்தவொரு வழிபாட்டுமுறையோ சடங்குகளோ உருவ வழிபாடோ இருக்கக்கூடாது என்பதாகும். அவரின் படைப்புகளையும், நடவடிக்கைகளையும், முன்னெடுப்புகளையும் ஊற்று நோக்கினால் இந்த லட்சியத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும். இவருடைய நூல்களின் தலைப்பையோ அதன் உள்ளடக்கத்தையோ பார்த்து இவர் ஒரு கிருத்துவ மிஷனரியோ என்று முடிவுக்குவர முடியாது. அதில் கூறியுள்ள கருத்துக்களை அழ்ந்து படிக்கும்போது இந்த குருகிய வட்டத்தில் இவரை அடைப்பது அய்யாவின் பேராற்றலுக்கும் முன்னெடுப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் செயலுக்கு ஒப்பாகும்.
இதனை இவருடைய நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார். இந்நூலினை இரண்டாம் உலகப்போர் தொடக்கத்தின் போது எழுதி முடிக்கின்றார். வயது முதுர்ச்சி பொருளாதார நிலைமை போன்ற காரணங்களால் இவரால் இதனை பிரசுரிக்க இயலவில்லை. எனினும் இதன் கைப்பிரதி (manuscript) ஒன்றினை இங்கிலாந்து நாட்டில் இவர் அங்கம் வகிக்கும் ஸ்வீடன் பர்க் கழகத்திற்கு நூலாக வெளியிடும்படி அனுப்பிவைக்கின்றார். இதனை அந்த அமைப்பினர் டைப் செய்து இரண்டு படிவங்கள் எடுத்து அவ்வமைப்பின் அவ்வாண்டு மாநாட்டு கூட்டத்தில் பரிசீலனைக்கு வைக்கின்றனர். ஆனால் இந்த நூலில் பெரும்பாழும் இந்து மத அடிப்படையாகக் கொண்ட கலைச்சொற்கள் ஏராளமாக இருந்த காரணத்தால் ஆங்கில மொழி பேசும் வாசகர்களுக்கு புரியாது என்று பதிப்பிக்கும் முயற்சியை செய்யவில்லை. இருப்பினும் கடினமில்லாத ஆங்கிலேயர்களால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு அத்தியாயத்தைமட்டும் தங்களது “நியூ சர்ச்” இதழில் பிரசுரிக்கின்றனர்.
இந்நூலைப்பற்றி குறிப்பிடும்போது இதனை அச்சிடும் பட்சத்தில் சுமார் 350 பக்கங்கள் கொண்ட நூலாகத்தான் இருக்கும். இது ஸ்வீடன் பர்க் தனது அய்ந்து முக்கிய அம்சங்களை உள்ளடக்கி அவர் காண விழைந்த ஒரு உலகு தழுவிய புதிய மதம் அமைப்பதற்கு பெரிதும் துணைபுரியும் என்று கூறியிருக்கின்றார். (இந்த டைப் செய்யப்பட்ட பிரதி இன்றும் இங்கிலாந்தில் இருப்பதாக அறியவருகிறோம் அதை நாம் பெருவதற்கான முயற்சியையும் மேற்கொள்வோம்).
10 வரலாறு மற்றும் மானுட ஆய்வாளர்
மறந்தும் மறைந்தும் போன தமிழன வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆய்ந்து உலகிற்கு வெளிக்கொண்டுவந்ததில் திரு கோபால் செட்டியாரின் பங்கு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. இவரின் இந்த ஆய்வுகளை உலக அளவில் இன்றும் பலர் மேற்கோளாகவும் மீண்டும் பதிப்பிப்பதிலும் ஆர்வம் காட்டுவதில் வியப்பொன்றும் இல்லை, அவைகளில் சிலவற்றை குறிப்பிடுவதன் மூலம் திரு கோபால் செட்டியாரின் பேரான்மையை அறியமுடியும் :
• “தமிழர்கள் சரிதம்” In Tamil. In 1912.
இந்த நூல் திரு கோபால் செட்டியார் அவர்களால் எழுதப்பட்ட தமிழ் இன வரலாற்று ஆய்வு நூல். நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இந்த அரிய நூல் நமக்கு கிடைக்கவில்லை. இந்த நூலை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
• “ஆதி திராவிடர் பூர்வசரித்திரம்” இது சென்னை “நியூ ரிபார்மெர்” பத்ராதிபர் டி.கோபால் செட்டியாரால் எழுதப்பட்டது. சென்னை ராமசுவாமி செட்டியார் அச்சகத்தில் பதிக்கப்பட்டது. In 1920. விலை 0-6-0 அணா. இந்நூல் Revd. Alexander Silver, M.A. அவர்களுக்கு உரிமையாக்கப்பட்டது. இந்த நூலின் தொடக்கத்தில் இவ்வாறு “இந்தியாவின் அன்றைய வங்காள ராஜதானியின் மேற்கே பெரும் பகுதியிலிருந்து கன்னியாகுமரிவரியிலுள்ள பாகங்களிலும் இலங்கைத் தீவிலும் பலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள். இது தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்து கோடி ஜனங்களிருக்கிறார்கள். மகமதியர்கள் ஆறு கோடி பேர். இவர்கள் மங்கோலியதுருக்கி நாட்டாரின் வம்சாவளியினர். ஆகையால் இந்தியாவிலுள்ள சுமார் முப்பது கோடி ஜனத்தில் கலப்பற்ற ஆரியர்கள் மூன்று கோடிதான் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு. மலையாளம், கோட்டா, ராஜ்மஹால். உரேயான், துளு, முதலிய பன்னிரண்டு திராவிட பாஷைகள்.
“இத்திராவிடர்கள் தான்இந்தியாவின் பூர்வகுடிகள். ஆரியர்கள் பின்னிட்டு வந்தவர்கள்” என்று பல்வேறு தரவுகளை மேற்கோள்காட்டி இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர் என்று காட்டுகிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் “பறையர் என்போர் ஆதிதிராவிடர் ஏன்? என்று பல்வெறு சான்றுகளுடன் விளக்குகின்றார்.
மூன்றாவது அத்தியாயத்தில் பறையர் மேன்மை பற்றியும். நான்காவது அத்தியாயத்தில் பறையர் எப்படி தாழ்த்தப்பட்டார்கள் என்பதைப்பற்றி விரிவாக கூறுகிறார்.
அய்ந்தாவது அத்தியாயத்தில் பிராமணர்கள்தான் “பறையர்” என்போரை தழ்த்தியது என்று பல்வேறு வரலாற்று இலக்கிய சன்றுகளுடன் நிரூபிக்கின்றார். ஆறாவது அத்தியாயத்தில் ஆதிதிராவிடர் சிறப்பை நாடியவர்கள் என்ற தலைப்பின் கீழ் அவர்களின் சிறப்பை இலக்கியங்களில் பாராட்டியவர்களின் பட்டியலிட்டு அவர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்களை கூறுகிறார். குறிப்பாக கபிலர், சிவவாக்கியார், அவிரோத உந்தியார் உரையாசிரியர், ஞானவெட்டியாக்கிய சாம்புவனார், திராவிட பௌத்த கவிஞர்கள், குதம்பை சித்தர் பாடல், பத்திரகிரியார், பாச்சலூர் பதிகம், நல்வழி போன்ற இலக்கிய சான்றுகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
முடிவுரையாக ஆதி திராவிடர் தங்களது தாழ்ந்த நிலையை மட்டும் காட்டும் ஒரு மருத்துவ வெப்பமாணியைப் (தெர்மாமீட்டர்) போல இல்லாமல் ஒரு சமூக மருத்துவராக ஆதிதிராவிடர் நிலை மேம்பாட்டிற்கு திரு கோபால் செட்டியார் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான இந்நோய்க்கான தீர்வுகளையும் (practical solutions) கூறியுள்ளார். அவைமுறையே :-
• ஆதிதிராவிடர்கள் தங்கள் ஏழ்மை நிலையினை முதலில் போக்க முற்படவேண்டும் இதற்கு என்றுமே அழியாத கல்வியை கற்று மேன்மையடைய வேண்டும் என்ற தீர்வை முதன்மையாக வைக்கின்றார்.
• அடுத்ததாக திராவிடர்களின் பூர்வீக மதமான பௌத்தத்திற்கு மாற வெண்டும் என்ற தீர்வை முன்மொழிகிறார். இதனை அறிந்து தான் அரசியல் சட்ட மேதை அம்பேத்கார் அவர்களும் தன் இறுதி காலத்தில் புத்தமதத்தை தழுவினார் போலும்.
• மேலும் ரஜாராம் மோகன் ராய் தோற்றுவித்த் பிரம்ம சமாஜம் அமைப்புகளில் ஆதி திராவிடகள் சேரவேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகின்றார். அல்லது மகாராஸ்டிராவின் சீர்திருத்த செம்மல் வித்தல் ராம்ஜி சிந்தே ஏற்படுத்திய ஒடுக்கப்பட்ட பிரிவினர் அமைப்பில் (Depressed classes mission) இணைந்து கொள்ள வலியிறுத்தினார்.
• மேலும், இந்திய சுய ராஜ்ஜியம் என்பது பிராமணர்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதையும் அப்போதே தீர்க்க தரிசனமாக திரு கோபால் செட்டியார் பதிவு செய்துள்ளார். சுயராஜ்யம் அடைவதன் மூலம் வர்ணாஸ்ரம முறையை ஏற்படுத்த பிராமாணர்கள் எத்தனிக்கிறார்கள் எனவே ஆதி திராவிடர்கள் சுய ராஜ்ய இயக்கத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற தீர்வையும் முன்மொழிகிறார்.
இந்த நூலின் யதார்த்தத்தை உணர்ந்து தான் இந்நூலினை தலித் இயக்கங்கள் இதன் மறு பதிப்பை தற்போது அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.
3) சைவ நெறிதான் ஆதிகால இங்கிலாந்து மக்களின் மதம் “Saivam the religion of the Ancient Britons.” என்ற ஆங்கில நூல எழுதியுள்ளார். இதில் மனித இனம் முதலில் தோன்றியது கடல்கோளால் அழியப்பட்ட லெமூரியக் கண்டத்தில் தான் என்றும். உலகின் ஆதிகுடிகள் தமிழர்கள் என்றும், இங்கிலாந்து நாட்டவரின் பழங்கால மதக்கோட்பாடு ட்ரூயிடிசம் (Druidism) சைவ நெறி என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் மற்றும் ஆய்வு முடிவுகளின் ஆதாரங்களுடன் விளக்கமாகவும் ஆனித்தரமாகவும் கூறியுள்ளார். இந்நூல் 1932 வருடம் வெளியிடப்பட்ட்து. In English. விலை ரூ 8- 0-0.
11 தமிழ் மொழி மற்றும் இனப் பற்றாளர்.
தமிழ் மொழியின் மீது திரு கோபால் செட்டியாருக்கு இருந்த மதிப்பினை அவர் எழுதிய வரலாறு மற்றும் ஆய்வு நூல்களில் இருந்து அறியலாம். இவர் பெரும்பாலும் பழந்தமிழ் சங்ககால இலக்கியங்களில் இருந்து மேற்கோள்கள் பல காட்டியிருப்பார். தான் சார்ந்த இனத்தின் வரலாறு மட்டுமின்றி தமிழர் சரிதம் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் அனைவரது வரலாறு போன்றவற்றை இலக்கியச் சான்றுகளுடன் நிரூபித்துள்ளார். தான் சார்ந்த தமிழ் இனத்தின் தொன்மையை நிலைநாட்ட இங்கிலாந்து நாட்டின் ஆதி மதமே தமிழர்களின் மதமான சைவம் தான் என்று பலவித சான்றுகளுடன் ஒரு நூலை எழதி வெளியிட்டுள்ளார்,
இவரின் நூல்கள் அனைத்திலும் தொல்காப்பியம்தொட்டு சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியங்கள் தற்காலஇலக்கியங்கள் என பலவற்றிலிருந்து மேற்கோள்கள் ஏராளமாக கையாண்டுள்ளார். இது இவரின் தமிழ் இலக்கிய அறிவை பரைசாற்றும்.
எடுத்துக்காட்டாக “சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்” என்ற நூலினை திரு.கோபால் செட்டியார் எழுதும் முன்னரே சென்னையை சார்ந்த வித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவர் “சேனைத்தலைவர் மரபு விளக்கம்” என்ற நூலினை எழதியுள்ளார். ஆனால் இதில் சபாபதி முதலியார் “கந்தபுராணம்” ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு சரித்திரத்தை முடிவுசெய்துள்ளார். ஆனால் திரு கோபால் செட்டியார் அவர்களோ கந்த புராணத்துடன் பெரியபுராணம், தொல்காப்பியம், போன்ற பல்வேறு தமிழ் இலக்கிய சான்றுகளுடன் இந்நூலினை எழுதியுள்ளார். இதனை பாராட்டி பாரிஸ்டர் திரு.கே.சி.சுப்பிரமணிய செட்டியார் தான் இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இறந்தபோது தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்தும் விடுதலை நாளிதழில் 08.01.1954-ல் வந்த துணை தலையங்கத்தின் இரங்கல் செய்தியில் தர்மபுரி அறிஞர் டி.கோபால் செட்டியார் டாக்டர் நடேசனாருடன் சேர்ந்து முதன் முதலாக திராவிடர் தனி இனம் என்றும். ஆரியர் வேறு திராவிடர் வேறு என்றும். இருவரும் தனித்தனி கலாசாரத்தை சேர்ந்தவர்கள் என்றும் வெளிப்படையாகக் கூறிவந்தார் என்று குறிப்பிட்டுள்ளது..
தமிழ் இனத்தின் மீது இவர் கொணட பற்றால் தமிழ் மக்களுக்கான விடுதலை என்பது திராவிட நாட்டின் விடுதலை என்ற முடிவுக்கு ஒரு காலகட்டத்தில் திரு கோபால் செட்டியார் முடிவு செய்தார். கோபால் செட்டியார், பாலசுந்தர நாயகர், பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்களின் தனி திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையை கவனித்த முஸ்லிம் லீக் தலைவர் முஹமது அலி ஜின்னா அவர்கள் தானும் தனி பாகிஸ்தான் கோரிக்கையை முன்னெடுக்கின்றார். இச் செய்தியை Political System in Pakistan பாகிஸ்தான் அரசியல் அமைப்பு என்ற பத்து தொகுப்பு நூல்களை எழுதிய குரோவர் வீரேந்திரா & அரோரா ரஞ்சனா என்ற வரலாற்று ஆசிரியர்கள் தங்களது முதல் தொகுப்பில் (Volume I) Genisis of Pakistan தனி பாகிஸ்தான் என்ற கோரிக்கையின் தொடக்கம் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிட்டுள்ளனர்.
12 கவிஞர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
இவர் ஆங்கிலம் மற்றும் தாமிழில் புலமைபெற்றவர், அதனால் இரு மொழிகளிலும் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார் என்பது போற்றுதலுக்குறியது.. 1901 –ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் இறந்த போது ஆங்கிலத்தில் ஒரு இரங்கல் கவிதை எழுதி இங்கிலாந்திற்கு அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து மெட்ராசு ஆங்கிலேய அரசு இவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இவர் எழுதிய “ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்” எனும் நூலினை Revd. Alexander Silver, M.A. அவர்களுக்கு உரிமையாக்கினார். இந்த உரிமையாக்கலை ஒரு கவிதையாகப் படைத்தார். கோபால் செட்டியார் எழுதிய உரிமையுரை கவிதை :-
“வன்புறு வெண்புகட் டுண்டிட சீராட்டி
அன்பில் விழிநீர் ததும்பிய நின்றனரால்
எண்ணியத் தேமருஞ் சில்வர் துரையவர்கட்
கின்னூ லுரிமை யுடைத்து.”
இவர் எழுதிய “சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்” என்ற நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாக “சுப்ரமணிய அகவல்” என்ற தலைப்பில் முருகப்பெருமானை வாழ்த்தும் செய்யுள் ஒன்று இயற்றியிருக்கின்றார். இத்துடன் “காப்பு” செய்யுள் ஒன்றினையும் எழதியுள்ளார்.
இவரின் நியூ ரிபார்மெர் இதழின் நோக்கத்தைகூட ஒரு கவிதை வடிவில்தான் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது இந்த இதழில் ஒரு ஆங்கிலக்கவிதை ஒன்றினை தவறாது பிரசித்திருப்பார். இவரின் கவிதை எழுதும் திறமையை போற்றி அப்போது இருந்த “Madras Standard” செய்தி இதழ் 1896-ம் வருடத்திலேயே இவருக்கு “திருப்பத்தூர் கவிராயர்” என்ற பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.
13. சிறந்த சீர்திருத்த செம்மல் :-
திரு கோபால் செட்டியார் அவர்கள் தனது வாழ்நாளின் தொடக்ககாலத்திலிருந்தே சமூக மாற்றத்தில் அக்கரையுள்ளவராக இருந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் தருமபுரியில் சிலகாலம் தான் பயின்ற பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தருமபுரியில் இளைஞர்களை திரட்டி சுவாமி விவேகானந்தரின் இந்து மத சீர்திருத்தத்தில் ஈர்க்கப்பட்டு அவரின் “இந்தியாவின் புதிய இறை ஆட்சிமுறை” என்ற அமைப்பின் வழியில் தர்மபுரியில் இளைஞர் அமைப்பு ஒன்றினை ஒருங்கிணைத்து அதற்கு தலைமை ஏற்கிறார்.
இவரின் சிறந்த சமூக சீர்திருத்த கருத்துக்களை கண்ட இவரது நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால், தன் வருமானம் கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு திருப்பத்தூரிலிருந்து இடம் பெயர்ந்து மெட்ராஸ் சென்று அங்கு தி நியூ ரிபார்மெர் – புதிய சீர்திருத்தகாரன் – என்ற ஆங்கில மாத இதழை தொடங்குகிறார். இப்பத்திரிகையின் தலைப்பே இவர் ஒரு சீர்திருத்தக்காரர் என்பதை பறைசாற்றுகிறதல்லவா. அங்கிருந்து தனது சமூக சீர்திருத்த பணியை தொடங்கி வாழ் நாள் முழுவதும் செய்துவருகின்றார். பிற்பட்ட பிராமணர் அல்லாதோர் சமூக முன்னேற்றத்திற்காக சர். பி. டி தியாகராயர், நடேசனார், டி.எம்,நாயர் போன்றோர் தொடங்கிய நீதிக்கட்சியில் இணைந்து செயல்படுகிறார். பிற்பட்டோர்,, தாழ்த்தப்பட்டோர் முன்னெற்றத்திற்காக தனது செயல்பாட்டினை தொடர்கின்றார்.
சென்னையில் சட்டம் பயிலும்போதே திரு.கோபால் செட்டிக்கு “இந்து நாளிதழ்” ஆசிரியர் திரு.G,சுப்ரமணிய அய்யங்கார் அவர்களின் நட்பு கிடைக்கிறது. அவர் தலைமையில் “சென்னை சமூக சீர்திருத்த சங்கம்” (Madras Social Reform Association) எனும் இயக்கத்தை தொடங்குவதற்கு திரு.கோபால் செட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார், இதில் குறிப்பிடத்தக்கது இச்சங்கத்தின் தொடக்கவிழா அப்போது இவர் பயின்ற சென்னை கிருத்துவ கல்லூரியின் “இவான்ஜலிஸ்டிக் அரங்கில்” நடைபெற்றது.
விதவை திருமணம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சீர்திருத்தங்களில் அக்கரை காட்டிவந்தார். தனது மதாந்திர இதழில் வரும் பெரும்பாலான கட்டுரைகள் சமூக சீர்திருத்தங்களை பிரதிபலிக்கும் வண்ணமாகவே இருந்தன. மாதிரிக்கு சில வற்றை கீழே கொடுக்கின்றோம் ;-
• The Hindu Religious and social reform Movement. (இந்து மதம் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களும்.) கட்டுரை எழுதியவர் வ்.சீனிவாராவ்.
• Reform or Development (சீர்திருத்தம் அல்லது வளர்ச்சி). அருள்மிகு எட்வின் கிரீவ்ஸ்
• Social Problem (சமூக சிக்கல்கள்) – கே.சிகஞ்சிலால்.
• The inequalities, Inequities and the anamolies of Life ( வாழ்வின் ஏற்றதாழ்வு, சமநிலையின்மை மற்றும் முரண்பாடுகள்) – D.Gopal Chettty.
• Reform and Patriotism (சீர்திருத்தமும் தேச பக்தியும்) –கி.ஒய்.சிந்தாமணி
• Window marriage association (விதவை திருமண சங்கம்), Ahamedabad.
• Widow remarriage (விதவை திருமணம்) – திவான் பகதூர். ரகுநாத ராவ்.
• The present position of Women (இன்றைய பெண்கள் நிலைமை) கிருபாராம்.
• Women as makers of modern Japan (நவீன ஜப்பானை உருவாக்கும் பெண்கள்) – எஸ்.ராம ராவ்..
• The Indian past and present women (இந்தியாவில் கடந்த காலம் மற்றும் தற்கால பெண்கள்) எஸ்.எச்.ஜாப்வாலா.
• The Depressed classes (நலிந்த பிரிவினர்) அஜிசுத்தின் அஹமத்.
இவரின் நியூ ரிபார்மரில் வந்த ஆசிரியர் தலையங்கங்கள் பெரும்பாலானவை சமூக சீர்திருத்த சம்பந்தமானவை.
மதத்தின் அடிப்படையில் திருமண சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட திருமணமாக இருந்தது. ஆனால் எந்த மதத்தையும் சாராத சடங்குகள் சம்பிரதாயம் இல்லாத திருமணங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதை ஆதரித்தார். இதன் விளைவாக The Special Marriage Amendment Bill 1908, என்று கொண்டுவந்த சிறப்புதிருமண திருத்த வரைவு சட்டத்தை வரவேற்று தலையங்கம் எழுதியுள்ளார்.
Non-brahmins and Social Reform. (பிராமணர் அல்லாதவரும் சமூக சீர்திருத்தமும் என்ற தலையங்கம் 1913-ம் வருடம் தனது நியூ ரிஃபார்மர் இதழில் எழுதி பிராமணர் அல்லாத பிற்படுத்த வகுப்பினர் சீர்திருத்தத்திற்கு பாடுபட்டார்.
நாட்டின் விடுதலையிலும் நாட்டம் உள்ளவராக ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர். பின்னர் காங்கிரசை விட்டு வெளியேறி இந்தியநாடு சுதந்திரமாக ஆட்சிசெய்ய லாயக்கற்ற நாடு என்ற கருத்தை ஏற்று சமுதாய விடுதலைக்காக படுபடலானார். குறிப்பாக பிற்படுத்தபட்ட மக்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு உழைத்து வந்தார்.
13 சைவ சித்தாந்த மெய்யியல் அறிஞர்.
சைவ சித்தாந்தத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சைவ சித்தாந்தம் என்பது எளிதில் புரிந்துகொள்ள முடியாத மெய்யியல் தத்துவமாகும்.
இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் சைவ சித்தாந்த தத்துவத்தை சாமானிய மக்களுக்கு விளக்கும் படைப்புகளே. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் தத்துவத்தை பற்றிய படைப்புகளே இவரது நூல்கள். இதைப்பற்றி நேரிடையாக கோபால் செட்டியாரிடம் கேட்டவர்களிடம் சைவ சித்தாந்தத்தை புரிந்துகொள்வது கடினம் எனவேதான் இச்சித்தாந்தத்தை எளிமைபடுத்தி அனைத்து மக்களுக்கும் தமிழரின் மதமான சைவமதம் போய்சேர வேண்டும் என்ற நோக்கில் தமது முழு கவனத்தையும் செல்விடுகிறேன் என்பார். ஒரு முறை இவரது உறவினர் கடத்தூர் தெய்வத்திரு ரத்தனவேல் செட்டியார் வேலூருக்கு இவரை பார்க்கவந்தபோத. நிகழ்ந்த உரையாடலில் சைவசித்தாந்தத்தைப் பற்றி கேட்டதாகவும் அதற்கு செட்டியார் அந்த தத்துவம் மிகவும் சிக்கலானது என்று கூறியாதாக அப்போது சிறுவனாக உடன் இருந்த தற்போது நலமுடன் வேலூரில் வாழும் ஒய்வுபெற்ற ஆசிரியர் திரு.ஜீவானந்தம் (கோபால் செட்டியாரின் மருமகளின் சகோதரர். செட்டியாரை நேரில் பார்த்துப் பழகிய கடைசி மனிதர்) எங்களிடம் 18.11..2022 –ம் தேதி நேரில் சந்தித்தபோது கூறினார்.
14 உலக பொது மெய்யியல் கோட்பாடின் தேடல் :-
போரும் பூசலும் அற்ற அறிவியல் அடிபடையில் உலகிற்கு ஒரு உன்னத மத நெறியை உருவாக்கும் தேடல் ஒன்றை திரு கோபால் செட்டியார் அவர்கள் தொடக்ககாலத்தில் இருந்து இறுதிநாள் வரை தனது வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார்
அவரது ஒவ்வொரு செயலும் அதை நோக்கியே பயணித்திருந்தது. தனது தொடக்க காலத்தில் கல்லூரி படிப்பு முடித்து தர்மபுரியில் ஆசிரியப்பணியில் சேர்கிறார். அக்காலகட்டத்தில்தான் விவேகானந்தர் சிகாகோவில் உலக மதங்களின் பாராளுமன்ற மாநாட்டில் (1893) உரையாற்றிவிட்டு இளைஞர்களின் எழச்சி நாயகனாக திரும்பிவந்த காலம். அவர் இந்து மதத்தை சீர்திருத்த இந்நாட்டு இளைஞர்களுக்கு விடுக்கும் அறைகூவலை ஏற்று செட்டியார் அவர்களும் தன் பங்காக தர்மபுரியில் இளைஞர்கள் அணி ஒன்றை கட்டி தலைமதாங்கி வழி நடத்துகிறார்.
விவேகானந்தரின் சீர்திருத்த இயக்கம் மற்றும் கேசவ சந்தர் சென் தோற்றுவித்த New Dispensation of India போன்ற கருத்துக்களின் தாக்கம் செட்டியார் அவர்களை உலகு தழுவிய ஒரு உன்னத மத நெறியை தோற்றுவிக்கும் தேடல் என்ற கோட்பாட்டுக்கு அழைத்து செல்லும் அடித்தளமாக அமைந்தது.
தமிழர் மதமான சைவநெறியில் தேர்ச்சி பெற்ற அறிஞராக விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தை ஒட்டியே இருந்தது. சைவ நெறிதான் உலகின் ஆதி மத நெறியாக இருந்தது என்று தனது “சைவநெறி - சைவ நெறிதான் ஆதிகால இங்கிலாந்து மக்களின் மதம் “Saivam the religion of the Ancient Britons.” என்ற ஒரு ஆய்வு நூலில் பல சான்றுகளுடன் நிலைநாட்டியுள்ளார். மெய்கண்ட தேவர் மற்றும் திருமூலர் போன்றோர் தத்துவ விளக்கங்களின் வழியில் உலகாயித ஆரிய வேத மத சடங்குகள் ஏதுமில்லாத ஆன்ம ரீதியாக அனிவருக்கும் பொதுவான இறைவனை அடையும் தேடல் கொண்ட ஒரு உன்னத மதக் கோட்பாடு தான் சைவ நெறி என்று தெளிவுபெற்று அத்தகு மெய்யில் கோட்பாட்டை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக்கும் வழியினை ஒட்டியே செட்டியாரின் சிந்தனையும் செயல்பாடும் இருந்தது.
இவரின் “தி நியூ ரிபார்மெர்” பத்திரிகைக்கு உலக அரங்கில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஆதரவாளர்கள் துருக்கி நாட்டை சேர்ந்த “பன்னாட்டு பாஹாய் அமைப்பை” சேர்ந்தவர்கள். இந்த அமைப்பை திரு.அப்துல் பாஹா (1819 முதல் 1850 வரை வாழ்ந்த மத சீர்திருத்தவாதி) என்பவர் தோற்றுவித்தவர் ஆவார். இவர் அனைவருக்குமான மத, இன, பொருளாதார வேறுபாடு அற்ற ஒருங்கினைந்த எந்த ஒரு வழிபாட்டு சடங்குகளின்றி இடைத்தரகர்களில்லாத “பாஹாய் அமைப்பை” தோற்றுவித்தவர் ஆவார். இந்த பாஹாய் அமைப்பு தற்போது உலக்கெங்கும் பரவி பன்னாட்டு அமைப்பாக வளர்ந்துள்ளது.
( கூடுதல் செய்தி : இந்தியாவில் டெல்லியில் 2001-ம் ஆண்டு 25 ஏக்கர் பரப்பளவில் 2500 பேர் அமர்ந்து அவரவர் விரும்பும் வண்ணம் சாதி, மத, இன, மொழி வேறுபாடின்றியும் எந்தவித சடங்கோ சம்பிரதாயமோ இன்றியும் வழிபடும் அரங்கு ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது ).
அதேபோல் உலக அரங்கில் மற்றுமொரு மதசீர்திருத்த அமைப்பான “பன்னாட்டு ஸ்வீடன் பர்க் சொசைட்டி”-யிலும் திரு.கோபால் செட்டியாருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்திலிருந்து வெளிவந்த இந்த அமைப்பின் “தி நியூ சர்ச்” மாத இதழ் இவரைப் பற்றி கட்டுரைகள் பல எழுதியுள்ளது. இவர் எழுதிய ஆங்கில நூல்கள் அனைத்தும் இந்த மாதஇதழில் இடம் பெற்றது. இவரது சில நூல்கள் இங்கிலாந்து நாட்டிலும் அச்சடிக்கப்பட்டது. (சில ஆச்சிடப்படாமல் கைப்பிரதிகளாக இன்றளவும் இங்கிலாந்தில் உள்ளதாக நமக்கு தரவுகள் கிடைத்துள்ளது.)
15 பெரியோரைத் துணைகோடல் :-
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் “ என்று திருவள்ளுவர் பெரியாரைத் துணை கோடல் என்ற அதிகாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பை போற்றவேண்டும் எனும் வள்ளுவ வாய்மொழிக்கு ஏற்ப திரு.கோபால் செட்டியார் அவர்கள் தனது நட்பு வட்டாரமாக அறிவுசால் பெருமக்களை - தமிழ் கூறும் நல்லுலகிலும் இந்திய துணைக்கண்ட அளவிலும் உலக அளவிலும் பெரும் அளவில் - கொண்டு இருந்தார். இந்த நட்பு வட்டாரங்கள் செட்டியாரின் கருத்துக்களையும் லட்சியங்களையும் மேன் மேலும் வளர்த்து எடுத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல பெரிதும் ஏதுவாக இருந்தது.
தொலைத்தொடர்பு இல்லாத பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே டால்ஸ்டாய், உலக சுவீடன்பர்க் அமைப்பு தலைவர்கள், அப்துல் பாஹாய் போன்ற பல உலக அறிஞர்களுடனும் தந்தை பெரியார், தமிழறிஞர் ந.மு..வேங்கடசாமி நாட்டார், தென்னாப்ரிக்காவின் தொழில் அதிபரும் மகாத்மா காந்தியின் நண்பருமான பொறையார் உயர்திரு ஆர்.பாலகுரு செட்டியார் போன்ற பலருடன் தொடர்பு கொண்டிருந்தவர்.
லியோ டால்ஸ்டாய் : போரும் அமைதியும் (War and Peace) என்ற புகழ் பெற்ற நூலினை எழுதிய ரஷ்ய எழத்தாளர் கவுன்ட் லியோ டால்ஸ்டாய் அவர்களுடன் கடிதப் போக்குவரத்து தொடர்பு வாயிலாக செட்டியார் அவர்கள் பெரிதும் நட்புடன் இருந்தார். மகாத்மா காந்தி – டால்ஸ்டாய் நட்புகூட அக்டோபர் முதல் நாள் 1909-ம் வருடத்தில் தான் தொடங்குகிறது அன்றுதான் இந்திய சுதந்திர போராட்டத்தை அகிம்சை வழியாலான நடத்தவேண்டும் என்பதுதான் தனது போராட்ட முறை என்று டால்ஸ்டாய் அவர்கட்கு காந்தியார் லண்டனில் இருந்து ஒரு கடிதம் எழதுகிறார். அதற்கு பின்னர்தான் இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் திரு கோபால் செட்டியார் அவர்கட்கும் லியோ டால்ஸ்டாய் அவர்களுக்குமான நட்பு 1907-ம் ஆண்டுக்கு முன்பே தொடங்கியது என்பது வரலாறு. இதனை 2015-ம் ஆண்டு நடந்த கலை இலக்கிய பன்னாட்டு மாநாட்டில் ஹைதராபாத்தில் உள்ள ஆங்கில மற்றும் அந்நிய மொழிகளின் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு அபாய் மவுரியா என்பவர் இந்திய மற்றும் ரஷ்ய இலக்கிய பரிமாற்றம் என்ற தலைப்பில் வாசித்த ஆய்வுக்கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். :- டால்ஸ்டாய் அவர்கள் 1858-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய மக்கள்மீது தொடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக “The brutality of Great Britan” என்று குரல் எழுப்பினார். இதைக்கவனித்த பின்னர்தான் டால்ஸ்டாய் அவர்களுடன் பல இந்தியர்கள் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். முதன் முதலில் 1901-ம் ஆண்டு அவ்வாறு இந்தியாவிலிருந்து தொடர்புகொண்டவர் மெட்ராசை சேர்ந்த திரு.ராமஷேசன் என்ற “ஆரியன்” பத்திரிகையின் ஆசிரியர். அதன் பின்னர் திரு கோபால் செட்டியார் டால்ஸ்டாய் அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்.
“An eminent advocate of Madras, Mr Gopal Chetty editor of the journal “The New Reformer” corresponded with Tolstoy from May 1907 onwards and he published from Madras a book called Count Leo Tolstoy, His Life and Teachings”. இதுதான் டால்ஸ்டாய் அவர்களைப் பற்றி முதலில் இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்ட நூலாகும், என்று திரு.மவுரிய குறிப்பிடுகிறார். தனது இதழில் செட்டியார் அவர்கள் தான் டால்ஸ்டாய்-க்கு எழுதிய கடிதம் அதற்கு டால்ஸ்டாய் அனுப்பிய பதில் கடிதம் இரண்டையும் வெளியிட்டுள்ளார். மேலும், லியோ டால்ஸ்டாய் இறந்த பிறகு உலகெங்கும் உள்ள அறிஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து கடிதங்கள் எழுதியிருந்தனர். அதில் குறிப்பாக 50 கடிதங்களை மட்டும் தேர்ந்து எடுத்து ரஷ்யாவின் “டால்ஸ்டாய் கழகம்” ஒரு நூலாக வெளியிட்டது. அந்த 50 கடிதங்களில் திரு.கோபால் செட்டியாரின் கடிதமும் ஒன்று என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
லியோ டால்ஸ்டாய் இறந்த பிறகு உலகெங்கும் உள்ள அறிஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து கடிதங்கள் எழுதியிருந்தனர். அதில் குறிப்பாக 50 கடிதங்களை மட்டும் தேர்ந்து எடுத்து ரஷ்யாவின் “டால்ஸ்டாய் கழகம்” ஒரு நூலாக வெளியிட்டது. அந்த 50 கடிதங்களில் திரு.கோபால் செட்டியாரின் கடிதமும் ஒன்று என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
டால்ஸ்டாய் அவர்களப்பற்றி செட்டியார் குறிப்பிடும்போது, இவர்மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால் கிருஷ்ண பரமாத்மா, மற்றும் ஏசு கிறித்து போன்றவர்களைப் போல் ஒரு கடவுளின் அவதார புருஷராக போற்றப்பட்டிருப்பார் என்று புகழ்ந்துள்ளார்.
சென்னையில் சட்டம் பயிலும்போதே திரு.கோபால் செட்டிக்கு “இந்து நாளிதழ்” ஆசிரியர் திரு.G,சுப்ரமணிய அய்யங்கார் அவர்களின் நட்பு கிடைக்கிறது. அவர் தலைமையில் இயங்கிய “சென்னை சமூக சீர்திருத்த சங்கம்” (Madras Social Reform Association) தொடங்குவதற்கு திரு.கோபால் செட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார், .
மேற்கூறியவைகளால் உலகப்பிரசித்திபெற்ற கடத்தூர் பேரறிவாளர் D.கோபால செட்டியார் அவர்களின் வரலாற்று பதிவினை தமிழ்கூறும் நல் உலகிற்கு படைப்பதில் பெருமையடைகிறோம்.
இத்தகைய சிறப்புகளுக்கும் பெருமைகளுக்கும் சொந்தக்காரரான திரு.கோபால் செட்டியார் அவர்களை நாம் போற்றி பாராட்டவில்லையென்றால் மாபெரும் வரலாற்று பிழைக்கு நம்மை நாமே உட்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.
-----------------------------
ந ஜெயசீலன். காரப்பட்டு (30.12.2022)